சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்த இளம்பெண் ஒருவர், விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்து போனார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்
Published on

சென்னை,

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நள்ளிரவில் பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது. "என்னை விட்டுவிடுங்கள்" என்று அந்த பெண் கெஞ்சுவது அக்கம்பக்கத்தில் வசிப்போருக்கு பெரும் தவிப்பை கொடுத்தது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட வீட்டில் என்ன நடக்கிறது? என்று சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் அந்த வீட்டில் அழும் பெண்ணை விபசார தொழிலில் வற்புறுத்தி ஈடுபட செய்வதாக சந்தேகம் உள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விபசார தடுப்பு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில் விபசார தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், பொதுமக்கள் குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்டு திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பெண், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். விபசார கும்பலிடம் சிக்கி அந்த பெண்ணின் வாழ்வு சீரழிக்கப்பட்டு உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர். அவர், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண்ணை விபசார தொழிலில் ஈடுபடுத்தியதாக தரகர் காளிதாசன் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com