

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தொகுதிகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 28 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகள் எவை? எந்தெந்த தொகுதிகளை கேட்டுப் பெறலாம்? என்பது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை பிரசாரத்திற்காக எப்போது அழைத்து வரலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.