

சென்னை,
தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழகம் வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சட்டசபை தேர்தல் - 2026ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்களை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் வருகிற 26 மற்றும் 27-ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.