தமிழக சட்டசபை தேர்தல்: பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டது ஏன்..? - பரபரப்பு தகவல்

சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் துணை பொறுப்பாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி 2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர் அல்ல. பொறுமையாக நடந்து கொள்பவர். கட்சி தலைவர்களை பொறுமையாக அரவணைத்து செல்லும் பக்குவம் கொண்டவர். தற்போது அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே மனஸ்தாபம் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை சரியாக நிர்வகிக்கும் தலைவராக பாஜக மேலிடம் பைஜெயந்த் பாண்டாவை அடையாளம் கண்டுள்ளது.
இதனால் தான் அவர் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா தான் செயல்பட்டார்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த ஆம் ஆத்மி கட்சி மீதான எதிர்ப்பலைகளை சரியாக அறிந்து அதற்கேற்ப பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து பாஜகவுக்கு வெற்றியை தேடிதந்தார். இதன்மூலம் டெல்லியில் 10 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியதோடு, 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக.வை அரியணை ஏற்றினார்.
ஒடிசா, டெல்லி தேர்தலுக்கு முன்பாக பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். அங்கும் அவர் வெற்றி கண்டார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அசாமில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.
சர்பானந்தா சோனாவால் முதல்-மந்தியாக இருந்தார். 5 ஆண்டு ஆட்சியில் எதிர்ப்பு அலை வந்தது. இந்த வேளையில் தான் 2021 சட்டசபை தேர்தல் நெருங்கியது. இதையொட்டி 2020ம் ஆண்டில் அசாம் தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டார்.
எதிர்ப்பலையை சமாளிக்கும் வகையில் பிரசார வியூகங்கள் வகுத்து கொடுத்தார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்தது. ஹிமாந்த் பிஸ்வா சர்மா முதல்-மந்திரியானார். இப்படி இவரின் வியூகத்தால் அசாமில் பாஜக 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது,
ஒடிசாவில் 24 ஆண்டு நவீன் பட்நாயக்கின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது, டெல்லியில் 10 ஆண்டு ஆம்ஆத்மி ஆட்சிக்கு முடிவுரை எழுதி கெஜ்ரிவாலிடம் முதல்-மந்திரி பதவியை பறித்தது உள்ளிட்டவற்றில் பைஜெயந்த் பாண்டாவின் செயல்பாடு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தான் தற்போது அவர் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது சாணக்கிய தனம் தமிழகத்தில் எடுபடும் என்று பா.ஜ.க. மேலிடம் நம்புவதைவிட, இவரைப் பற்றி அறிந்த தி.மு.க. கூட்டணி கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.






