

சென்னை
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 13-ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தபடி சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்ய தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பட்ஜெட் மீதான முழு விவாதமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை என கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் துவங்க உள்ளதால் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நிகழ்வுகளை நாளை முதல் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.