சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றுகிறார்
Published on

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா இன்று (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றுகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ந் தேதி, குடியரசு தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா நடைபெறும் இடத்திற்கு காலை 7.55 மணிக்கு வருகிறார். அவரது காருக்கு, முன்னும், பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் க.சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

அவரை தொடர்ந்து, காலை 7.57 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்து இறங்குகிறார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

விழா மேடைக்கு அருகே நடப்பட்டுள்ள உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து, அந்த பகுதியில் மலர்தூவும்.

அதைத்தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப் படையினரின் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர், போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்வார்.

அதைத்தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

இந்த விழாவையொட்டி, கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீற்றிருக்கும் மேடையின் முன்பு, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்படும். இதில் சிறப்பாக செயல்பட்ட துறைக்கு பரிசு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் ப.தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பல நாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆண்டு, கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதேபோல், சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே அதிகாரிகள் சென்று சால்வை அணிவித்து, உரிய மரியாதை அளித்திட மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

குடியரசு தின விழாவை காணவரும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை நேரில் காண அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com