

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் இந்த பரவலைத் தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மறுபுறம், முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர், முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.
ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒலிபெருக்கி வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் எழும்பூர், சென்டிரல், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் முக கவசம் அணியாதவர்கள் குறித்த சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் அங்கு ரெயில்களுக்காக காத்திருந்த பயணிகளிடம், முக கவசம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.