கோவில்பட்டியில், புதன்கிழமை தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கோவில்பட்டியில், புதன்கிழமை தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
கோவில்பட்டியில், புதன்கிழமை தினசரி சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் இன்று(புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

புதிய கடைகள் கட்ட முடிவு

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் 398 கடைகள் இருக்கின்றன. இந்த கடைகளின் கட்டிடம் பழுதடைந்து இருப்பதால், அவற்றை இடித்து விட்டு ரூ.6.84 கோடியில் சந்தையில் புதிதாக 251 கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பணிக்காக, தற்காலிகமாக காய்கறி சந்தை புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலைய வளாகத்தில் தினசரி சந்தைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜன.26-ந்தேதி முதல் தற்காலிக இடத்தில் சந்தை செயல்படும் எனவும அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய கடைகள் கட்டுவது தொடர்பான வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆலோசனை கூட்டம்

நேற்று முன்தினம் தினசரி சந்தை புதிய கடைகள் கட்டுவது குறித்து ஆலோசனை கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்தை வியாபாரிகள் புறக்கணிப்பு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி கா.கருணாநிதி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தற்காலிக சந்தையில் செய்து தரப்படும். இன்று வந்துள்ளவர்கள் தவிர அடுத்தடுத்த நாட்களில் வரும் வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்கப்படும், என்றார்.

சந்தை வியாபாரிகள் புறக்கணிப்பு

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், தாசில்தார் சுசீலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன், தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டத்தில் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை.

இன்று கடையடைப்பு

மேலும், கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் தற்போது இயங்கி வரும் அனைத்து கடைகளுக்கும் பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வணிகர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு புதிதாக கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின்பு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொடுப்பது என நகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com