கைதிக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பை கையால் எழுதி ஜெயிலுக்கு அனுப்பினார்

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார்.
கைதிக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பை கையால் எழுதி ஜெயிலுக்கு அனுப்பினார்
Published on

சென்னை,

சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com