சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று பங்கேற்பு

2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று பங்கேற்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக கடந்த மாதம் (மே) 29-ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

தொடர்ந்து (30-ந் தேதி) பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கையும், 31-ந் தேதி எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கையும் நடைபெற்றது. ஜூன் 1-ந் தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினமும், நேற்றும் தமிழக சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கும் இன்றைய கூட்டத்தில், தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து பேசுகிறார். இறுதியாக, தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருக்கிறார்.

சட்டசபையின் முதல் நாள் மானியக் கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பங்கேற்ற தி.மு.க. உறுப்பினர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கும்வரை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்திருந்தனர். தொடர்ந்து, நடைபெற்ற 3 நாள் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், திருவாரூரில் 1-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழாவில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள், சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்கும் வகையில், 2-ந் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இன்று முதல் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே, இன்றைய கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச இருப்பதால், பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது. நேரமில்லா நேரத்திலும் (ஜீரோ ஹவர்) முக்கிய பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com