தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

மராட்டிய அரசு போல், தமிழகத்திலும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
Published on

சென்னை,

சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை, தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா? என்றும், அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியதாவது:-

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு சொற்குவைத் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த செயல்பாட்டில் புதிய சொற்களை கண்டறிந்துள்ளோம். இந்த திட்டம் இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

22,637 கலை சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொழியியல் சார்ந்த வேதியியல் அகராதியை வெளியிட்டு இருக்கிறோம். மருத்துவ அகராதியை வெளியிட்டு இருக்கிறோம். இதில் மொத்த தமிழ் சொற்களின் எண்ணிக்கை 8,03,875 ஆகும். பொதுவார்த்தைகளை அகற்றுவதற்கு சாப்ட்வேர் வெளியிடப்பட்டுள்ளது. இது தான் இந்த சொற்குவைத் திட்டத்தில் வருகிறது. இதனை ஒரு இயக்கமாக இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல சொல் உண்டியல் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் கடலின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை அளவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அறிவியல், தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் இருக்க கூடிய புதிய தத்துவங்களுக்கு தமிழ் வார்த்தைகள் ஒரு மாதத்திற்குள் உருவாக்க கூடிய பணி இந்த சொற்குவையால் நடக்கும்.

தங்கம் தென்னரசு (தி.மு.க.):- தமிழகத்தில் இருக்க கூடிய மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் உடனடியாக தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் இதற்கான ஆணை பிறக் கப்பட்டுள்ளது. அங்கே இருக்க கூடிய மத்திய அரசு அலுவலகங்களில் மராட்டிய மொழி தான். தமிழகத்திலும் அதுபோன்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அமைச்சர் பாண்டியராஜன்:- மராட்டியத்தில் எப்படி ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தார்களோ, அதேபோன்று தமிழகத்தில் இருக்க கூடிய மத்திய அரசு அமைப்புகளிலும் கொண்டுவருவதற்கு நாமும் முயற்சி எடுப்போம் என்று அவையில் கூறிக்கொள்கிறேன். அதை கண்டிப்பாக செய்ய முடியும்.

தமிழகத்திற்கு தமிழில் முதலீடு செய்ய மத்திய அரசுக்கு இந்த முறை அழுத்தம் கொடுத்து இருக்கிறோம். எப்படி இந்தி பிரசார சபை இருக்கிறதோ, அதைபோல் 21 மொழிகளுக்கும் ஒரு தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. நம்முடைய வளர் தமிழ் மையங்களுக்கு ரூ.50 கோடி நிதி கேட்டு இருக்கிறோம். தமிழை வளர்ப்பதில், தமிழை பரப்புவதில் அ.தி.மு.க. எவருக்கும் இளைத்தது இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com