கோவில்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது

கோவில்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவில்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது
Published on

சென்னை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கள்ள துப்பாக்கியுடன் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை சோதனைச்சாவடியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் போலீஸார் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். இதில் காரில் இருந்த மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார் காரை சோதனையிட்டனர்.

காரில், 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் 3 அரிவாள்கள் இருந்தன. இதையடுத்து கார் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவர்கள் 3 பேரையும் கிழக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் (35), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சி காந்தி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (24), திருநெல்வேலி கொக்கிரகுளம் மேலநத்தம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுரேந்தர் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் ஈரோட்டிலிருந்து மருத்துவ அவசரம் என இ- பாஸ் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ராஜ்குமார் மீது 3 கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, 2 ஆயுத கடத்தல் வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன. வினோத் குமார் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளன. சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் எதற்காக ஈரோடு சென்றனர். கள்ளத்துப்பாக்கி எங்கிருந்து வாங்கினார்கள் என்பது தொடர்பாக கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com