சென்னை மெரினா கடற்கரையில் காந்தி படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் காந்தி படத்துக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை
Published on

சென்னை,

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் சிலையும், அதற்கு கீழ் காந்தியின் உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, கே.பாண்டியராஜன் உள்பட நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தை சேர்ந்தவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

இதேபோல், கட்சி சார்பிலும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் உள்பட நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை தலைமையில் நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

சென்னை துறைமுகத்தில் காந்தியடிகள் 150-வது பிறந்தநாள் மற்றும் தூய்மை பாரதம் இயக்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நாள் சென்னை துறைமுக கழக தலைவர் ப.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தலைவர் தா.வெள்ளையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com