பள்ளி மைதானத்தில் வணிகரீதியான நிகழ்ச்சி நடத்த தடை கேட்டு வழக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் வணிகரீதியான நிகழ்ச்சிகளை நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பள்ளி மைதானத்தில் வணிகரீதியான நிகழ்ச்சி நடத்த தடை கேட்டு வழக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்த அஜய்பிரான்சிஸ் லயோலா உள்பட 5 பேர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவில் பங்களாக்கள் உள்பட 200 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்போரின் அமைதியான வாழ்க்கை அருகேயுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் அனாதை விடுதியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி மைதானத்தில் வார இறுதி நாட்களில் வணிகரீதியானவை உள்பட பலவகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

சில நேரங்களில் இதற்காக பள்ளிக்கு விடுமுறையே விடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தக கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது.

தடை வேண்டும்

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமல், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிவிடுகின்றனர். இதனால், எங்கள் தெருவில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. ஒலி மாசு, வாகன நெரிசல் ஏற்படுகிறது. தெரு முழுவதும் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதுகுறித்து புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே, வணிகரீதியான நிகழ்ச்சிகளை பள்ளிக்கூட மைதானத்தில் நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு தடை விதிக்கவேண்டும். எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தீர்வு என்ன?

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இந்த பிரச்சினைக்கு என்ன நடவடிக்கை எடுத்து தீர்வுகாண முடியும்? என்பது குறித்து போலீஸ் கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com