கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

பதவி ஏற்பு விழாவுக்காக மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு முத்திரையுடன் கூடிய காரில் ஏறி கவர்னர் மாளிகை நோக்கி வந்தார். சரியாக 8.55 மணிக்கு ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.

சரியாக 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். கவர்னரை திமுக தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார். கவர்னர் பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலின் எனும் நான் என கவர்னர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதல் அமைச்சராக பதவி ஏற்று கொண்ட ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.கவனருக்கு ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து அளித்தார்.

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களாக துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நீர் பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.க.பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். அழகிரியின் மகள் கயல்விழியும் கலந்து கொண்டார். தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

நேற்று மு.க.அழகிரி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாத்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவா மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவா என்று கூறியிருந்தார்.

மேலும் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், நவநீத கிருஷ்ணன், பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,செயலாளர் முத்தரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அபுபக்கர்,

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, ஆற்காடு வீராசாமி, ஐபேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், கவிஞர் வைரமுத்து, மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரும் பதவி ஏற்று கொண்டவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழாவையடுத்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளித்தார். மு.க.ஸ்டாலின், துரைமுருகனுடன் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் அருகருகே அமர்ந்து தேநீர் அருந்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com