சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர், துணை, உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி இடங்களை நிரப்பும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் பாலிமர் சயின்ஸ் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பேராசிரியர் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பும்போது ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் பலன்பெறும் வகையில் பல் கலைக்கழக அளவில் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சட்டம் இயற்றியது.

இதன்படி இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவும் (யு.ஜி.சி.யும்) நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப சென்னை பல்கலைக் கழகம் கடந்த மாதம் 5-ந் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், அந்தந்த துறை வாரியாக இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் பாலிமர் சயின்ஸ் பிரிவில் உள்ள இணை பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ள நான் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்து, பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிதாக அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், பேராசிரியர், உதவி, இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை சென்னை பல்கலைக்கழகம் நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த வழக்கிற்கு சென்னை பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகள், யு.ஜி.சி. உள்ளிட்டோர் வருகிற 25-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com