கழிவுகளை அகற்றுவது தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேலாண்மை குழுவினர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உள்ளூர் மேலாண்மை குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கழிவுகளை அகற்றுவது தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேலாண்மை குழுவினர் திடீர் ஆய்வு
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உள்ளூர் மேலாண்மை குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்டெர்லைட் நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் பேராட்டம் நடந்தது. 100-வது நாளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.

தொடர்ந்து ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது.

9 பேர் கொண்ட மேலாண்மை குழு

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மை குழுவை அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை எவ்வாறு அகற்றுவது, அதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்வது, ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக பல கட்டமாக ஆலோசனைகளை நடத்தினர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளின் நிலை, அதனை அகற்றுவதற்கு என்னென்ன எந்திரங்கள் தேவைப்படும், எவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக உள்ளூர் மேலாண்மை குழுவினர் நேற்று பகல் 11.50 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு திடீரென வந்தனர்.

ஆய்வு

உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மாவட்ட தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ராஜ், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பெறியாளர் ஹேமந்த் ஜோசன், தூத்துக்குடி மாநகராட்சி திட்டக்குழு செயற்பொறியாளர் ரங்கநாதன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், ஸ்டெர்லைட் நிறுவன தலைமை பொறியாளர் சரவணன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆலை வளாகத்தில் ஜிப்சம் வைக்கப்பட்டு இருந்த இடத்தை பார்வையிட்டனர். அங்குள்ள கழிவுநீர் குழிகளையும் பார்த்தனர். அதில் இருந்து ஏதேனும் கழிவுகள் வெளியேறி உள்ளதா, கரைகள் உடைந்துள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

அதேபோன்று பருவமழை தொடங்கும் முன்பு புதர்களை அகற்றுவது, பசுமை பரப்பை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியில் கொண்டு வரும் வாசல் பகுதியை பார்வையிட்டனர். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு மதியம் 1.30 மணி வரை நீடித்தது. சுமார் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் இந்த ஆய்வு நடந்தது. அதன்பிறகு குழுவினர் ஆலையில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றனர்.

அதிநவீன கண்காணிப்பு கேமரா

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளூர் மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டதை முன்னிட்டு ஆலை வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள், பணியாளர்களை தெளிவாக கண்காணிக்கும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

இந்த கேமராக்கள் அனைத்தும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கழிவுகள் அகற்றப்படும்போது, அலுவலர்கள் கவனமாக கண்காணிப்பு பணியையும் மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com