திருச்செந்தூரில், மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

திருச்செந்தூரில், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
திருச்செந்தூரில், மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவில் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
Published on

திருச்செந்தூர்:

மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இதனால் திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

கோவிலில் அதிகாலை நடைதிறப்பு

தமிழ் மாதங்கள் ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை போன்ற நாட்களில் இந்துக்கள் கடல் மற்றும் நதிக்கரைகளில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்தாண்டு புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடாந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் கார், வேன்கள், பஸ்கள், ரெயில் போன்றவற்றில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் குவிந்தனர். கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகளவில் இருந்ததால், பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும், தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் கூட்டத்தால் திருச்செந்தூரில் அதிகாலை முதல் வாகன பாக்கவரத்து நெரிசல் காணப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தவாறு சென்றன.

வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், ரெயில்களில் வந்திருந்தனர். இதனால் பஸ், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பக்தர்கள் பஸ், ரயில்களில் நின்றவாறு நீண்டதூரம் பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக திருச்செந்தூர்-பாலக்காடு ரெயிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்யும் நிலை காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com