

சென்னை,
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது இவ்வெற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட எனது வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.