வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தடகள பயிற்சியாளர் கைது; மேலும் 3 வீராங்கனைகள் புகார்

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் கைது செயய்பட்டார். அவர் மீது மேலும் 3 வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தடகள பயிற்சியாளர் கைது; மேலும் 3 வீராங்கனைகள் புகார்
Published on

தடகள பயிற்சியாளர்

மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் (வயது 59). இவர் சென்னை பிரைம் என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மைதானத்தில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

இந்த நிலையில் நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். அந்த மனுவில், பிசியோதெரபி பயிற்சி அளிப்பதாக கூறி நாகராஜன் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் நாகராஜன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் கண்காணிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நேற்று உயிர் தப்பினார். எனினும் அவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். எனவே அவரை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மனநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அறிவித்தார். அதன்படி நேற்று விசாரணையின் முடிவில் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.

தடகள பயிற்சியாளர் நாகராஜனின் பாலியல் சீண்டலில் சிக்கிய வீராங்கனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஜெயலட்சுமியின் 94447 72222 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார்தாரர்கள் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணில் நேற்று 3 வீராங்கனைகள் தொடர்பு கொண்டு, தடகள பயிற்சியாளர் நாகராஜன் தங்களிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com