

ஆத்தூர்,
ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் காமராஜர் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகள் சந்திரலேகா (வயது 29). இவர், எம்.எஸ்.சி., பி.எட். படித்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் இளங்கோநகரை சேர்ந்த ராஜதுரை (31) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சந்திரலேகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்திரலேகாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் தமிழ்மணி விசாரணை நடத்தி வருகிறார். சந்திரலேகா உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சந்திரலேகாவின் பெற்றோர் தரப்பில் ஆத்தூர் போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சந்திரலேகாவும், ராஜதுரையும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும், காதலித்து திருமணம் செய்த போதிலும் திருமணத்தின் போது 8 பவுன் நகை, ரூ.2 லட்சம் சீர்வரிசையாக கொடுத்தோம். அவர்கள் பல்வேறு ஊர்களில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். திருமணம் ஆன சில நாட்களில் ராஜதுரைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். சந்திரலேகாவுக்கு 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளனர். சாதி ரீதியாகவும் அவளை கொடுமைப்படுத்தி உள்ளனர். வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்துள்ளனர். எனவே எங்களது மகள் சாவுக்கு ராஜதுரை காரணம் என்றும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.