

சென்னை,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கடந்த ஜூன் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தன. 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஏ.டி.எம். மையங்களில் ரூ.50 லட்சம் கொள்ளை போனது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அப்போது போலீசாரிடம் வீரேந்திர ராவத் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் தெரியாது என்றும் தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாகவும் வாக்குமூலம் அளித்தான்.
இதற்கு அடுத்ததாக இந்த கொள்ளையில் தொடர்புடைய மூன்றாவது நபர் நஜீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின் நஜீம் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். பின்னர் நஜீம் உசேனை ஜூலை 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சகானா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நஜீம் உசேனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பீர்க்கங்கரனை போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு குறித்த விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நஜீம் உசேனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சகானா, நஜீம் உசேனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.