ஏ.டி.எம். கொள்ளையில் பணத்தை மீட்க போலீசார் தீவிரம்

பிடிபட்டவரிடம் 3-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எம். கொள்ளையில் பணத்தை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏ.டி.எம். கொள்ளையில் பணத்தை மீட்க போலீசார் தீவிரம்
Published on

பிடிபட்டவரிடம் 3-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எம். கொள்ளையில் பணத்தை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏ.டி.எம். கொள்ளை

திருவண்ணாமலை நகரில் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த சுமார் ரூ.73 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா, அரியானா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் உடந்தையாக இருந்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கோலார் பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை 3-வது நாளாக நீடித்து வருகிறது.

பணத்தை மீட்பதில்...

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொள்ளையர்களிடம் இருந்து ரூ.69 லட்சம் வரை பணம் மீட்கப்பட வேண்டும். தற்போது பிடிப்பட்ட நிஜாமுதீன் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்காகவே விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் பணம் குறித்த தகவல் பெறமுடியவில்லை.

சங்கிலி தொடர்போல பணம் கைமாறியது தெரிய வருகிறது. பணத்தை மீட்பது சிக்கலாக உள்ளது. எனினும் பணத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். பணம் கைமாறியதாக இருக்கும் பட்சத்தில் யாருக்காக, எதற்காக பணம் கைமாறியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த பணம் கைமாறப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com