வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.

சென்னை,

இலங்கை கடலோர பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் முல்லைத்தீவுக்கு அருகே கரையை கடந்தது. இது மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது.

அது நேற்று காலையில் மேலும் வலுவிழந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story