கொரோனாவை மிஞ்சிய கொடூரம்: கடந்த 2 ஆண்டுகளில் 188 போலி மருத்துவர்கள் கைது

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 188 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவை மிஞ்சிய கொடூரம்: கடந்த 2 ஆண்டுகளில் 188 போலி மருத்துவர்கள் கைது
Published on

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் எண்ணிலடங்கா துன்பங்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா பாதிப்புகளுடன் பிற மருத்துவம் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை பெற வேண்டிய நெருக்கடியான சூழலில் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலி மருத்துவர்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அதிலும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் உயிரோடு விளையாடும் மோசமான செயல்களிலும் பலர் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் போலி மருத்துவர்கள் 188 பேர் பிடிபட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர், கடந்த 2019-20ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 419 மற்றும் 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கபட்டனர்.

அதே போன்று 2020-21ம் ஆண்டில் 31 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு மருத்துவமனை சட்டம் 2018ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி காரணமாக, 2020-21ம் ஆண்டில், 31 பேர் மட்டுமே குழுவினரால் கண்டறிய முடிந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த குழுவின் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொதுமக்களை காப்பாற்றும் நோக்குடன் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய நெருக்கடியான சூழலில், மருத்துவ பணியை சேவையாக நினைத்து செயல்படுபவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில போலிகளும் கண்டறியப்படுவது வருத்தம் ஏற்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com