அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்

குருபரப்பள்ளி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்
Published on

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவ வாகனங்கள்

வேலூரில் இருந்து ராணுவ போர் தளவாளங்களை ஏற்றிக் கொண்டு, 2 கனரக வாகனங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள், அதன் அதிகாரி பிரசாந்த் தர்மா தலைமையில் நேற்று பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அந்த வாகனங்கள் நேற்று பிற்பகல் வந்து கொண்டிருந்தன. அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் வந்த ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சிறிது தூரம் அரசு பஸ் சென்றதாக கூறப்படுகிறது.

டிரைவர் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த துணை ராணுவ வீரர்கள் அரசு பஸ்சை முந்தி சென்று வழி மறித்தனர். மேலும் பஸ் டிரைவர் தமிழரசை ராணுவ அதிகாரி பிரசாந்த் தர்மா சரமாரியாக தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராணுவ வாகனத்தின் குறுக்கே அரசு பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ் டிரைவர் மற்றும் பயணிகள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் துணை ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்கள், டிரைவரை தாக்கிய ராணுவ அதிகாரி பிரசாந்த் தர்மா டிரைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்த துணை ராணுவ வீரர்கள் 5 பேர் இங்கிருந்து கலைந்து போங்கள். இல்லாவிட்டால் சுட்டு விடுவோம் என்று கூறி துப்பாக்கியை தூக்கி காட்டினார்கள். இதனால் பொதுமக்கள் திரண்டு ராணுவ வாகனம் மற்றும் அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் துணை ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் போராட்டத்தை கைவிட்டு செல்லுவோம் என கூறினர். இதையடுத்து ராணுவ அதிகாரி பிரசாந்த் தர்மா டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து பாதுமக்கள் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து ராணுவ தளவாட வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

பரபரப்பு

ராணுவ அதிகாரி தாக்கியதில் காயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் தமிழரசு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குருபரப்பள்ளி அருகே தமிழக அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கியதும், தட்டி கேட்ட பொதுமக்களை துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com