

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார். அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு இச்சம்பவத்தை அரசியல்கட்சியைச் சார்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் தமிழரின் தனி மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கர்நாடக அரசின் கவனத்திற்கு முறையாகக் கொண்டு சென்று, அங்கு வாழும் மற்றும் அங்கு செல்லும் தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியா என்பது பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட நாடு. ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும்போது மொழி அல்லது கட்சி அடையாளங்களின் பெயரால் இழிவுபடுத்தப்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இத்தகையச் செயல்கள் மீண்டும் தொடராத வண்ணம் கர்நாடக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.