ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்கு


ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்கு
x

துறையூரில் நேற்று அதிமுகவினர் ஆம்புலன்சை முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது.

திருச்சி

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோது, திடீரென அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே அ.தி.மு.க.வின் ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்சை விட்டு இடையூறு ஏற்படுத்தி கூட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டு சதி செய்கிறது. கூட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேட்டதோடு, இது தொடர்பாக எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று இரவு அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கும் திடீரென்று 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைக்கண்ட தொண்டர்கள் அந்த வாகனத்தை மறித்தனர். மேலும் கையால் தட்டி பின்பக்க கதவை திறந்து நோயாளிகள் யாரேனும் உள்ளனரா? என்று பார்த்தனர். ஆனால் நோயாளி இல்லாததால், ஆம்புலன்சை முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆத்தூர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அந்த வழியாக சென்றதாக டிரைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நோயாளியை ஏற்றுவதற்காக சென்ற 108 ஆம்புலன்சை வழிமறித்து தாக்கிய விவகாரத்தில் அதிமுகவினர் 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story