

தேனி,
பெரியகுளம் அருகே நள்ளிரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டை தாக்கி நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேலகாமாக்காப்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). இவர் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருட்டை தடுக்கும் வகையில் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவில் பகுதியில் ஏட்டு சசிக்குமார் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது கோவில் அடிவாரத்தில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சசிக்குமார், அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். அவர்கள் கடப்பாரை மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை தரையில் உட்காரும்படி கூறினார்.
அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த மேலும் 3 பேர் திடீரென்று வந்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். அவர்களுடன் சசிக்குமார் போராடினார். பின்னர் அனைவரும் சேர்ந்து ஆயுதங்களால் சசிக்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் அவர் நிலைகுலைந்து போனார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் சசிக்குமார் கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் பாதி சங்கிலி மட்டும் கொள்ளையர்களின் கையில் சிக்கியது. அதனுடன் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்திற்கு சசிக்குமார் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு சென்ற போலீசார் சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டை தடுக்க ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவையே தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.