திருச்சியில் பள்ளி நிர்வாகிகள் மீது தாக்குதல் - அலுவலகம் சூறை

பள்ளி முடிந்து மகன் வீட்டுக்கு வராததால் பள்ளி நிர்வாகிகளை தாக்கி, பள்ளி அலுவலகத்தை சூறையாடிய தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் பள்ளி நிர்வாகிகள் மீது தாக்குதல் - அலுவலகம் சூறை
Published on

ஸ்ரீரங்கம், ஜூலை.21-

பள்ளி முடிந்து மகன் வீட்டுக்கு வராததால் பள்ளி நிர்வாகிகளை தாக்கி, பள்ளி அலுவலகத்தை சூறையாடிய தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

5-ம் வகுப்பு மாணவர்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது 10 வயது மகன் ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியில் உள்ள வைஜெயந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் பள்ளிக்கூடத்துக்கு சில சமயங்களில் சைக்கிளிலும் அல்லது நடந்து செல்வது வழக்கம். நடந்து செல்லும் நாட்களில் பள்ளிக்கு சென்று மாணவரை பெற்றோர் அழைத்து வருவதுண்டு.

நேற்று காலை மாணவர் பள்ளிக்கு நடந்து சென்றார். இதனால் மாலையில் பள்ளியிலிருந்து மாணவரை அழைத்து வர சிவக்குமார் சென்றார். அப்போது, பள்ளியில் மாணவர் இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர் பள்ளி முழுவதும் தேடினார். மேலும் மகனை காணவில்லை என தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

தாக்குதல்

உடனே அங்கு வந்த சிவக்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் துணைமுதல்வர் கிருஷ்ணாவிடம் எனது மகனை காணவில்லை. இதற்கு நீங்கள் தான் பொறுப்பு, மாணவனை பார்த்து கொள்ளாமல் நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? என தகராறில் ஈடுபட்டனராம்.

அப்போது சிவக்குமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு துணைமுதல்வர் கிருஷ்ணா, சிவக்குமாரிடம் "சற்று பொறுமையாக இருங்கள் சகமாணவர்களிடம் கேட்டு சொல்கிறோம்" என கூறினார். அதற்குள் சிவக்குமாரும், அவருடன் இருந்தவர்களும் பள்ளி துணைமுதல்வரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த உதவி பொதுமேலாளர் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயனையும் அவர்கள் தாக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

சூறையாடினர்

மேலும் பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடிகள், நாற்காலிகள், தண்ணீர் குடங்கள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சூறையாடினர். உடனே பள்ளி ஊழியர்கள் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிவக்குமார், அவரது அண்ணன் ஆறுமுகம் (41), நண்பர் தாமரைகண்ணன் (40), ஆறுமுகத்தின் மகன் பிரசன்னா (20) ஆகியோரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மகனை அழைத்து செல்ல தந்தை சிவக்குமார் பள்ளிக்கு வர தாமதமானதால் மாணவர் அருகே உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு நடந்தே சென்றது தெரியவந்தது.

பரபரப்பு

இது தரியாத சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் பள்ளி நிர்வாகத்தினரை தாக்கி, பள்ளி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த பள்ளி நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், "உண்மை நிலை என்னவென்று தெரியாமல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பள்ளி அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது கவலையளிக்கிறது. பள்ளியில் வேலைசெய்யும் நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com