அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்


அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
x

கோப்புப்படம் 

பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாக மாற்றிய தி.மு.க. அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் இரவு, பகலாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையையும், பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசால், அரசுப்பள்ளிகள் மதுபானக்கூடங்களாக மாறிவருவதோடு, அதனை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதன் உச்சபட்சத்தை அடையும் என்பதற்கு நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களே சாட்சியாக இருக்கும் நிலையில், தற்போது அரசுப்பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அளவிற்கு மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, பெட்ரோல் ஊற்றி தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, பள்ளி வளாகத்தில் மது அருந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story