சந்தேக நபர்களை பிடிக்க சென்ற போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

சந்தேக நபர்களை பிடிக்க சென்ற போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சந்தேக நபர்களை பிடிக்க சென்ற போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
Published on

திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் டொனால்ட். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணியில் இருந்த போது கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்திநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்றதும் தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீஸ் ஏட்டு டொனால்ட் அவர்களை விரட்டி சென்று பிடித்து தன்னிடம் இருந்த லத்தியால் தாக்கி போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றார். உடனே அவர்கள் அதே லத்தியை பிடுங்கி ஏட்டு டொனால்டை சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து 3 வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். உடனே இது குறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மைக் மூலம் அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். மர்ம நபர்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே காயமடைந்த டொனால்ட் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com