

வையம்பட்டியில் போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
தாக்குதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரது தாத்தா மருதை. இவர் தனது சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், `பாட்டியை ஏன் முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள்? நாங்கள் தானே அவரை பராமரித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் பார்த்துக் கொள்வோம், என்று கூறி மருதையிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது.
பலத்த காயம்
இது குறித்து வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் மருதை புகார் செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பாஸ்கரை சப்-இன்ஸ்பெக்டர் பிரவின் குமார் வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் பிரவின்குமார், போலீஸ்காரர் செந்தில்குமார் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக தெரிகிறது.
இதில் பாஸ்கரின் தொடை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்தது. இதனையடுத்து போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்து விட்டனர். வீட்டுக்கு சென்ற அவர் வலியால் துடித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாஸ்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துசென்று மணப்பாற அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயுதப்படைக்கு மாற்றம்
இந்த தகவல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவின் குமார், போலீஸ்காரர் செந்தில்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் வையம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.