ஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
ஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Published on

ஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

2-வது மனைவி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளியூர் டேங்க் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 51). கூலித்தொழிலாளி. சொந்தமாக விவசாய தோட்டமும் உண்டு. அவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இது தர்மனின் மனைவிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தர்மன் தனிமையில் இருந்தார். பின்னர் மூங்கில்பட்டியை சேர்ந்த மாரசாமி என்பவருடைய மகள் விஜயசாந்தி (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். விஜயசாந்தி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மன்-விஜயசாந்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

செல்போன் பேச்சு

குழந்தை பிறந்த பிறகு, விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இது தர்மனுக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. எனவே செல்போனில் பேசுவதை நிறுத்தும்படி கண்டித்தார். இந்த நிலையில் கடந்த 30-1-2019 அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஜயசாந்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு, தூங்கிக்கொண்டிருந்த தர்மன் கண்விழித்தார்.

அதனால் ஆத்திரம் அடைந்த தர்மன், இந்த நேரத்தில் யாருடன் போனில் பேசுகிறாய். எத்தனை முறை சொல்லிவிட்டேன். கேட்க மாட்டாயா? என்று சத்தம் போட்டார். அதற்கு, விஜயசாந்தி, நான் அப்படி தான் பேசுவேன். எனக்கு நீயும் வேண்டாம். உன் குழந்தையும் வேண்டாம் என்று பதில் அளித்தார். மேலும் படுக்கை அறைக்குள் சென்ற அவர் பால் சொம்பை எடுத்து தர்மன் மீது வீசினார். இதனால் தர்மன் ஆத்திரம் அடைந்தார். அதற்குள் விஜயசாந்தி அறை கதவை சாத்தி பூட்டிக்கொண்டார்.

மண்வெட்டியால் தாக்கி கொலை

விஜயசாந்தி எறிந்ததில் தர்மனின் கையில் பால் சொம்பு தாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தூங்கிக்கொண்டு இருந்த மகனை கையில் எடுத்துக்கொண்டு பெரிய கள்ளியூருக்கு சென்று மனைவி ஓடிப்போய் விட்டார் என்று கூறிவிட்டு மகனை விட்டு விட்டு புறப்பட்டார். கடும்கோபத்தில், விஜயசாந்தியை கொலை செய்து விடுவது என்ற கொடூர எண்ணத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போதும் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. எனவே வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து கதவை உடைத்து அறைக்குள் சென்றார். மனைவி என்றும் பாராமல், ஆத்திரத்தில் கடுமையாக தாக்கினார். மண்வெட்டியால் அடித்தும், வெட்டியும் தாக்கியதில் படுகாயம் அடைந்த விஜயசாந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் அவர் பாலில் விஷத்தை கலந்து குடித்தார். ஆனால், அது அப்படியே வாந்தியாக வெளிவந்தது. எனவே தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

10 ஆண்டு ஜெயில்

பின்னர் அவர் ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் முன்னிலையில் ஆஜரானார். அவர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக பவானி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் அந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com