பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி திமுக-வின் ஆதரவு அமைப்பான ஆதித்தமிழர் கட்சியினர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உருவப்படத்தை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமிய சகோதரிகளின் உரிமைகளையும் இஸ்லாமிய மக்களின் நலனையும் ஒருசேரப் பாதுகாக்கும் இச்சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக நாட்டின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய சமூகங்களைச் சார்ந்த மக்களும், இச்சட்டத்தின் திருத்தங்களைப் படித்து தெளிவுபெற்ற அறிஞர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இவ்வேளையில், திமுக அரசின் நிழலில் இருக்கும் ஒரு சில அமைப்புகளுக்கு இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வந்தது?

ஒருவேளை ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், திமுக அரசே ஆதித்தமிழர் கட்சியினரைத் தூண்டிவிட்டு, இன்று இந்த போராட்டம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.

காரணம், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும், பாராளுமன்றத்திலும் பல மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகே வக்பு திருத்த மசோதாவானது சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற திடீர் போராட்டங்களும் அதில் நமது பிரதமரின் உருவப்படங்கள் எரிக்கும் வன்முறைகளும் எதற்கு? இதுபோன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழலை உண்டாக்குவதோடு சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

எனவே, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் தடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com