‘ஒன்றிணைய வேண்டும்' என்ற கோஷத்துடன்.. எடப்பாடி பழனிசாமியின் பிரசார பேருந்தை முற்றுகையிட முயற்சி

எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த பிரசார பேருந்து வந்த போது அவர்கள் அந்த பேருந்தை முற்றுகையிட முயன்றனர்.
தேனி,
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் செய்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேனியில் இருந்து கம்பத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் அ.தி.மு.க. கொடி மற்றும் ஒன்றிணைய வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனருடன் பெண்கள் உள்பட சிலர் நின்று கொண்டிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த பிரசார பேருந்து அந்த வழியாக வந்த போது அவர்கள் அந்த பேருந்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது அவர்கள் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பிரசார வாகனம் அந்த பகுதியை மெதுவாக கடந்து சென்றது.
அதேபோல், கம்பத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு போடி நோக்கி எடப்பாடி பழனிசாமி சென்றபோது, போடி அருகே சங்கராபுரத்திலும் மக்கள் சிலர் திரண்டு நின்று, ஒன்றிணைய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவங்கள் அந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, தேவர் பேரவை என்ற பெயரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
முன்னதாக கம்பத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அ.தி.மு.க. ஜனநாயக கட்சி. யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வர முடியும். தொண்டன் கூட இந்த கட்சியில் பொதுச்செயலாளர் ஆக முடியும். தொண்டன் கூட இந்த கட்சியில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆக முடியும். ஏன் முதல்-அமைச்சரே ஆக முடியும்.
இப்படி தி.மு.க.வில், தி.மு.க. தலைவர் சொல்ல முடியுமா?.. அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படும் கட்சி. இதனால் இக்கட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. எவ்வளவோ அவதாரம் எடுத்துப் பார்த்துவிட்டார் மு.க.ஸ்டாலின். ஒன்றும் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ வழக்குகளை சந்தித்து அதை எல்லாம் உங்களின் ஒத்துழைப்போடு தவிடு பொடியாக்கி விட்டோம்” என்றார்.






