

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் (வயது 22) என்பவருடன் 22 வயது கல்லூரி மாணவி நட்பாகப் பழகி வந்துள்ளார். கார்த்திக்கிற்கு மதுப்பழக்கம் இருந்ததால், அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்ததோடு, அவரது தொலைபேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 4.8.2022 அன்று மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், "ஏன் என்னிடம் பேசுவதில்லை?" என தகராறு செய்துள்ளார். மேலும் அந்த மாணவி அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், "என்னிடம் பேசாத நீ உயிரோடு இருக்கக் கூடாது" எனக் கூறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை வெட்டிவிட்டுத் தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார்.
இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கொலை முயற்சி மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.