சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயற்சி: நடுக்கடலில் அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

கடலூரில் நடுக்கடலில் படகுகள் மற்றும் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயற்சி செய்த அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயற்சி: நடுக்கடலில் அதிகாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள்
Published on

கடலூர்,

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் பலர், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலூர் மாவட்ட கடல் பகுதியில் மீன் பிடிப்பதாக, கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை கடலூர் அருகே உள்ள கடல் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

வாக்குவாதம்

அப்போது நடுக்கடலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 30-க்கும் அதிகமான படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள், கடலூர் மாவட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என மீனவர்களை எச்சரித்தனர்.

அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகுகள் மற்றும் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் அனைவரும், அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்ய முயற்சி

மேலும் மீனவர்கள், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களது படகுகளுடன், அதிகாரிகள் வந்த படகுகளை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இதனால் அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.

பின்னர் அதிகாரிகள், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்யும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர். இதையடுத்து மீனவர்கள் அனைவரும், அங்கிருந்து புதுச்சேரி மாநில கடல் பகுதிக்கு சென்றனர்.

நடுக்கடலில் அதிகாரிகளை சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com