

ராமநாதபுரம்,
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.20 கோடி மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளையும், சுக்கு, மஞ்சள் பொடி மூடைகளையும் போலீசார் கைப்பற்றினர்.
ராமேசுவரத்திற்கு அருகில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் ராமேசுவரம், தனுஷ்கோடி என ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜீவமணி மற்றும் போலீசார் வேதாளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கடற்கரை செல்லும் சாலையில் கிடந்த 5 பார்சல்களையும், அதன் அருகில் கேட்பாரற்று நின்ற மோட்டார்சைக்கிளையும் பார்த்தனர்.
அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில், சுமார் 2 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாத்திரைகள், மோட்டார்சைக்கிளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். இந்த மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் யார்? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதே போல் புதுமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் முயற்சி நடப்பதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெனிபாராணி உள்பட கடலோர போலீசார் புதுமடம் கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்றில் சாக்கு மூடைகள் இருந்தன.
சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது சுக்கு, மஞ்சள் பொடி பாக்கெட்டுகள் இருந்தன. எடை போட்டதில் மொத்தம் 14 மூடைகளில் 531 கிலோ சுக்கு, 4 மூடைகளில் தலா 50 கிராம் எடையுடன் மொத்தம் 1500 மஞ்சள் பொடி பாக்கெட்டுகளும் இருந்தன. படகையும், மஞ்சள், சுக்கு மூடைகளையும் பறிமுதல் செய்த கடலோர போலீசார், படகு யாருக்கு சொந்தமானது? இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றி வைத்து, தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.