மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு:தி.மு.க. கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

மேட்டூர்

மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நகராட்சி கூட்டம்

மேட்டூர் நகராட்சி கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. கூட்டம் நகராட்சி ஆணையாளர் நித்தியா, நகராட்சி பொறியாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணைத்தலைவர் காசி விஸ்வநாதன் பேசும் போது, 'மேட்டூர் நகராட்சிக்கு புதிதாக வந்துள்ள அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு சிறப்பான நகராட்சியாக கொண்டு வர வேண்டும்' என்றார்.

தி.மு.க. கவுன்சிலர் ரங்கசாமி பேசும் போது, '30 வார்டுகளிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதனை அதிகாரிகள் நேரில் சென்று கண்டறிந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து பேசிய நகராட்சி கவுன்சிலர்கள் மாரியம்மாள், ஈஸ்வரி, திலகா, கலையரசி, கலா, பாப்பாத்தி, விஜயா உள்பட பலரும் தங்கள் வார்டுகளில் தெரு விளக்கு எரிவதில்லை, சாலை வசதி சரியாக இல்லை, குடிநீர் வினியோகம் சிறப்பாக இல்லை, பாதாள சாக்கடை சீர்குலைந்துள்ளது என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

மலும் நகராட்சி தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது குறித்த தீர்மானம் வாசிக்கப்பட்ட போது தி.மு.க. கவுன்சிலர் இளங்கோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நகராட்சி தலைவர் சந்திரா பதில் கூறிய நிலையில், 1-வது வார்டு கவுன்சிலர் உமா, நகராட்சி விஷயங்களில் தலைவரின் மகன் தலையீடு இருப்பதாக கூறி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தீக்குளிக்க முயற்சி

இதனிடையே நகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய தி.மு.க. கவுன்சிலர் இளங்கோ, வெளியே பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை நகர்மன்ற கூட நுழைவு வாயிலுக்கு எடுத்து வந்தார். பின்னர் பெட்ரோலை தலை மற்றும் உடல் மீது ஊற்றிக் கொண்டு நகராட்சி தலைவருக்கு எதிராக கோஷமிட்டப்படி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த நகராட்சி பணியாளர்கள், பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் மற்றும் கவுன்சிலர்கள் உடனடியாக அங்கு வந்து பெட்ரோல் பாட்டிலை பறித்து வீசினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் கவுன்சிலர் இளங்கோவை நகராட்சி வாகனம் மூலம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் மேட்டூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியேறியதை தொடர்ந்து கூட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com