

கோவை,
கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியில் அனைத்து துறைகளின் சார்பில் தங்கள் திட்ட சேவைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை மாநகர காவல்துறை சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அரங்கில் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் விருதுநகரை சேர்ந்த காளிமுத்து (வயது 29) என்பவர் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் பிற்பகல் 3.40 மணிக்கு திடீரென்று அங்கு டமார் என்று சத்தம் கேட்டது. அப்போது திடீரென்று காளிமுத்து வயிற்றை பொத்தியபடி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார்.
தீவிர சிகிச்சை
உடனே அங்கு இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிச்சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கடன் தொல்லை காரணமாகதான்
அதில் காளிமுத்து, தன்னிடம் இருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் வயிற்றில் சுட்டதும், வலதுபுற வயிற்றில் பாய்ந்த தோட்டா, பின்புறம் முதுகுவழியாக வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர், காளிமுத்து சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
தற்கொலை முயற்சி செய்த போலீஸ்காரர் காளிமுத்துவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் இருப்பதாகவும், அதன் காரணமாகதான் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாகதான் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.