

நெல்லை,
திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி பழைய கோவில்தெருவை சேர்ந்தவர் சைமன்(வயது 68), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மகன்கள் டைடஸ், சைலஸ் ஆகியோர் புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்கு வந்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் கீழ்தளத்திலும் மேல்மாடியில் உள்ள அறைகளிலும் படுத்து தூங்கிகொண்டு இருந்தனர். இவர்கள் வீட்டு மேல்மாடி கதவை பூட்டாமல் இருந்துள்ளனர்.
அந்த வழியாக நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், ஆள் இல்லாத அறையில் பீரோவில் வைத்து இருந்த 50 பவுன் நகை, ரொக்கம் 80 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தரைத்தளத்தில் உள்ள அறைகளை திறக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் விழித்துக்கொள்ள அதிர்ச்சி அடைந்த மர்ம நபர், அங்கு இருந்த கைக்கடிகாரத்தை எடுத்துவிட்டு தப்ப ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர் ரமணி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
சம்பவம் நடந்த அதே இரவு இடையன்குடி தோப்பு தெரு சுந்தர் சிங், பிளசிங் தெரு ஜெபா, கோயில்தெரு கோல்டன் டேனியல், பீட்டர் தெரு ரமேஷ் ஆகியோர் வீடுகளிலும் திருட்டு முயற்ச்சி நடந்துள்ளது. பீட்டர் தெரு ரமேஷ் என்பவர் வீட்டில் நடந்த திருட்டு முயற்சி, அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும் இடையன்குடி- ஆனைகுடி விலக்கில் கேட்பாரற்று நின்ற மினி லாரியையும் போலீசார் கைபற்றியுள்ளனனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மினி லாரியில் வந்து அதை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தனித்தனியாக சென்று இந்த குற்ற செயலில் ஈடுபட்டார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் 4 வீடுகளில் திருட்டு முயற்சியும் ஒரு வீட்டில் திருட்டும் நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.