தவெக எம்.எல்.ஏக்களிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசுகின்றனர்: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுள்ளனர் சிடிஆர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 நிர்மல் குமார்
Published on
Updated on

சென்னையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலினும், எடப்பாடியும் சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தோம். அதனுடைய வெளிப்பாடுதான் இது. அவர்கள் அனைவரும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நபர்கள். செந்தில் பாலாஜி போன்றவர்கள். ஸ்டாலினுடைய உத்தரவின் பேரில், உதயநிதியின் உத்தரவின் பேரில், எங்களுடைய பல எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு, 'நாங்கள் உங்களுக்கு ரூ.10 கோடி தருகிறோம், ரூ.20 கோடி தருகிறோம், ரூ.50 கோடி தருகிறோம்' என்று ஒவ்வொருவராக தொடர்புகொண்டு, ஒரு மாதமாக தொடர்புகொள்ளாத நாட்களே இல்லை. அனைவரிடமும் ஒவ்வொரு வழியாக பேசிக்கொண்டே வருகிறார்கள்.

எம்.எல்.ஏவுக்கு மிரட்டல்

சட்டப்பூர்வமாக இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர் வேண்டாம் என்று சொன்னதும், அவரிடம் மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பணம் கொடுக்க முற்பட்டவர்கள் கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர்.நரேஷ், தியாகராஜன் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நரேஷ் என்பவர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் குமாருடன் நேரடியாக தினமும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இது தொடர்பாக எல்லா தொடர்புகளையும் வைத்திருக்கிறார். எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், எந்தெந்த எம்.எல்.ஏ.க்களை வாங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற கேவலமான, கீழ்த்தரமான வேலையை ஸ்டாலினும், உதயநிதியும், அவர் கையில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜி போன்றவர்களை முடுக்கிவிட்டு, எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருகிறது.இதனால்தான் ஸ்டாலின் ஒவ்வொரு இடத்திலும் '30 நாள்' என்று சொல்கிறார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் பேரம் பேசுகிறார்கள். 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுள்ளனர். இதை பல எம்.எல்.ஏ.க்கள் புகாரளித்துள்ளனர். சிலர் மிரட்டப்பட்டுள்ளனர். மிரட்டப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் இன்று புகாரளித்துள்ளார். இதை இவர்கள் விடாமல் செய்துகொண்டு இருக்கிறார்கள். மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான கோடி கொள்ளையடித்துவிட்டு, இப்போது சும்மா இருக்க முடியாமல் குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார்கள்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com