ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க முயல்வது கண்டிக்கத்தக்கது - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

மேற்காசிய நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க முயல்வது கண்டிக்கத்தக்கது - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
Published on

சென்னை,

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு, எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இது ஈரானின் இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார்.

அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் அனுமதி இன்றியே,  ஈரான் மீதான போரை டிரம்ப் துவக்கி உள்ளார். இது அந்நாட்டின் அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும். அமெரிக்காவிலேயே அந்நாட்டு மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மிக முக்கிய அரசியல் தலைவர்களும் டொனால்டு டிரம்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிப்பதற்கு தயங்குகிறது. அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்தெல்லாம் கவலைப்படாத மத்திய மோடி அரசு, ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்காத மத்திய அரசு, அமெரிக்க - இஸ்ரேல் அட்டூழியத்தை கண்டிக்க துணிவு இல்லாத மத்திய அரசு, தற்பொழுது அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அச்சுற்றறிக்கையில், இந்தியாவில் நடைபெறும் ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்குமாறும், போராடும் அமைப்புகள் மற்றும் குரல் கொடுக்கும் தனிநபர்களை கண்காணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை முடக்கும் நோக்கம் கொண்டது.

இந்தியா எப்போதுமே உலக சமாதானத்தை, அமைதியை விரும்புகின்ற நாடாகும். அணிசேரா நாடாகும். பிரதமர் மோடி பதவிக்கு வந்தது முதல், நமது வெளியுறவுக் கொள்கையில் பிற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் ஆதரவு  நிலையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்க - இஸ்ரேல் மேற்கொள்ளக்கூடிய  ஈரானுக்கு எதிரான, இந்த ஆக்கிரமிப்புப் போரை ஆதரித்து வருகிறது. ஈரான் ஆதரவு போராட்டங்களையும் முடக்கிவிட முனைகிறது.

எனவே, இந்திய மக்கள் போருக்கு எதிரான இயல்பான மனநிலையுடன் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்க இஸ்ரேலிய அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டங்களை முடக்க நினைப்பது ஏதேச்சதிகார, நடவடிக்கையாகும்.

ஜனநாயக விரோத இத்தகையப் போக்கை உடனடியாக மத்திய மோடி அரசு கைவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com