

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சில ரெயில்கள் தாம்பரம் மற்றும் மாம்பலத்தில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்தே புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்திற்கே வந்து சேரும். அதாவது, ஆகஸ்டு 5-ந் தேதி தஞ்சாவூரில் இருந்து புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் மறுநாள் காலை 3.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11 மணிக்கு அங்கிருந்தே புறப்படும்.
இதேபோல், மங்களூரு சென்டிரல் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.
மேலும், கொல்லம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். ஆகஸ்டு 6-ந் தேதி இரவு 8.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்தே புறப்படும். சேலம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மேலும், திருச்சி - சென்னை இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 19-ந் தேதி வரை மாம்பலம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். ஆகஸ்டு 7-ந் தேதி முதல் ஆகஸ்டு 21-ந் தேதி வரை இந்த ரெயில் நள்ளிரவு 12.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல், அகமதாபாத் - திருச்சி வாராந்திர ரெயில் ஆகஸ்டு 6 மற்றும் 13-ந் தேதி ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. ஆகஸ்டு 9 மற்றும் 16-ந் தேதிகளில் மீண்டும் அதே பாதை வழியாக திரும்பிச் செல்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.