தணிக்கை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்?

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பு குறித்த தணிக்கை அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தணிக்கை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்?
Published on

சென்னை,

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 2015-ம் ஆண்டு வெள்ளம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசியதாவது.

கடந்த 2015-ம் ஆண்டு கடுமையான வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டபோது, செம்பரம்பாக்கம் ஏரி முன்அறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்த நிலை அனைவருக்கும் தெரியும்.

இதுகுறித்து, மத்திய அரசு ஒரு தணிக்கை அறிக்கையை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டிக்கு அந்த அறிக்கை இதுவரை வைக்கப்படவில்லை. சட்டசபையிலும் இதுவரை அந்த தணிக்கை அறிக்கையை வைக்காமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை, அதில் அரசின் குறைபாடுகள், அரசு செய்துள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிற காரணத்தால், சட்டசபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நான் அறிகிறேன்.
இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.

2017-ம் ஆண்டு மார்ச் 31 வரை உள்ள காலத்திற்கான மாநில நிதிநிலை, பொது மற்றும் சமூகப்பிரிவு, பொருளாதார பிரிவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவை வழக்கம்போல் இந்த வரவு-செலவு கூட்டத்தொடரின் இறுதி நாளன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும். இது தவிர, வருவாய்த்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான அறிக்கைகள் இதுவரை பெறப்படவில்லை. இவை பெறப்பட்டவுடன் இந்தக் கூட்டத்தொடரின் இறுதி நாளன்று மற்ற அறிக்கைகளுடன் சமர்ப்பிக்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் அதன் தாக்கம் குறித்த செயல்பாடு குறித்து மாநில கணக்குத்துறை தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட செயல்பாட்டு தணிக்கை அறிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவிக்க சட்டத்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது. சட்டத்துறையின் கருத்து வந்தபின் அந்த அறிக்கையை சட்ட சபையில் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com