மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 3 மாதத்தில் ஔிரும் தோட்டம் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் இரவு நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஜொலிக்கும் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பூங்கா ஒளிரும் விலங்குகள், வண்ண வண்ண ஒளிரும் பூக்கள், ஒளிரும் மரங்கள், செல்பி புகைப்படம் எடுக்கும் இடங்கள், செயற்கை நீரூற்று, மினி 5 டி சினிமா, ஒளிரும் நீர் பூங்கா மற்றும் பலதரப்பட்ட உணவு அரங்குகள் என 2 ஏக்கர் பரப்பளவில் கலைநயமும் இணைந்து தொழில்நுட்பத்தின் கைவண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்க உள்ளது. இந்த நிலையில் நேற்று சுற்றுலா வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்ய மாமல்லபுரம் வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

பிறகு அமைச்சர் ஔிரும் தோட்டம் அமைய உள்ள மாமல்லபுரம் மரகத பூங்கா பகுதிக்கு சென்று அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

மராட்டிய மாநிலம் பூனே நகரத்தில் டிஜிட்டல் முறையில் ஒளிரும் தோட்டத்திற்கான மின் விளக்குகள் ஒன்றோடு, ஒன்று பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மின் விளக்குகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டு மரகத பூங்காவில் அவை பொருத்தப்பட்டு 3 மாதத்தில் மரகத பூங்காவில் ஔிரும் தோட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். அதை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டது போல் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதியில் ஔி, ஒலி காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் வரும் போது அவாகள் முகம் சுழிக்கும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகளால் ஊர் அசிங்கமாக உள்ளது. அவர்கள் ரசிக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு மாமல்லபுரம் அழகுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் தமிழ்நாடு சுற்றுலா வளாச்சி கழக பொது மேலாளர் எஸ்.கமலா, சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் ஆர்.வெங்கடேசன், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் எம்.வி.மோகன்குமார், விசுவநாதன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com