முழு ஊரடங்கு நாட்களில் பஸ்-ரெயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ, டாக்சி

முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் சென்று திரும்புவோருக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ-டாக்சி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
முழு ஊரடங்கு நாட்களில் பஸ்-ரெயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ, டாக்சி
Published on

சென்னை,

முழு ஊரடங்கு நாட்களில் வெளியூர் சென்று திரும்புவோருக்கு பஸ்-ரெயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ-டாக்சி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாராட்டு

இந்த மாதம் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்பட்ட இரு முழு ஊரடங்கு நாட்களிலும், எவ்வித அசாம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் போலீசார் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். பொதுமக்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்து கொண்ட போதும், பொதுமக்களில் சிலர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், நமது காவல் துறையினர் துறைக்குரிய பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், சாமர்த்தியத்துடனும் பணியாற்றி உள்ளனர். இதற்காக எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட இரு முழு ஊரடங்கு நாட்களிலும், 9-ந் தேதி அன்று விதிமீறலுக்காக 19,962 வழக்குகளும், 16-ந் தேதி அன்று 14,951 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.78.34 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

நியாயமான கட்டணத்தில் ஆட்டோ-டாக்சி

முழு ஊரடங்கு நாட்களின் போது, வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்தவர்கள், தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு ரெயில்-பஸ் நிலையங்களில் ஆட்டோ மற்றும் டாக்சி கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், ஆட்டோ பயணத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்தது.

இனி வரும் ஊரடங்கு நாட்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல், பஸ்-ரெயில் நிலையங்களிலிருந்து வீடு திரும்புவோருக்கு நியாயமான அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com