வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஆட்டோ டிரைவர் கைது

திருமலைகுமார் கஞ்சா விதைகளை வேறொரு நபரிடம் இருந்து வாங்கி வந்து தனது வீட்டில் வளர்த்துள்ளார்.
தென்காசி மாவட்டம் வேதம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் திருமலைகுமார் (45 வயது), ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக நேற்று முன்தினம் இரவில் தென்காசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று திருமலைகுமாரின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.
அவரது பழைய வீட்டின் பின்பகுதிக்கு சென்று பார்த்தபோது சிறிய தொட்டிகளில் பூச்செடிகளுக்கு பதிலாக 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக கஞ்சா செடிகளை கைப்பற்றிய போலீசார், திருமலைகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் கஞ்சா விதைகளை வேறொரு நபரிடம் இருந்து வாங்கி வந்து தனது வீட்டில் பூச்செடிகள் வளர்ப்பதற்காக வாங்கிய தொட்டியில் போட்டுள்ளார். அதனை தினமும் தண்ணீர் ஊற்றி நன்கு பராமரித்து வந்துள்ளார். கஞ்சா செடி வளர்ந்த உடன், அதனை தனது பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ள திருமலைகுமார் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு கஞ்சா விதைகளை வழங்கிய நபர் யார்? எங்கு இருக்கிறார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






