வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது.
தனுஷ்
Published on: 

சென்னை,

சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாகத் தாக்குதல்

சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 19). இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரின் அண்ணன் சிலம்பரசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி அன்று இரவு சூர்யா மற்றும் அவரது தந்தை உட்பட 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனைத் தேடி வந்துள்ளனர்.

தம்பி வெட்டிகொலை

அந்த கும்பல் சிலம்பரசனைக் கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்றபோது, சுதாரித்துக்கொண்ட சிலம்பரசன் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அண்ணனைத் தாக்க முயன்ற கும்பலை தனுஷ் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், தனுஷை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனிப்படை அமைப்பு

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த எம்.கே.பி. நகர் போலீசார், தனுஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

4 பேர் கைது - தொடரும் விசாரணை

தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பொய்யாது, அப்புகுட்டி, சூர்யா மற்றும் பாட்ஷா ஆகிய 4 பேரை போலீசார் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X